கொல்கத்தா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பங்கேற்ற நீதித்துறை தொடர்பான மாநாட்டில், அரசியல் சார்பு இல்லாமல் நீதித்துறையை பாதுகாக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
நீதித்துறையின் சமகால வளர்ச்சிகள் குறித்த மாநாடு கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பேசிய மம்தா பானர்ஜி, ‘நீதித்துறை எங்களுக்கு மிக முக்கியமான கோவில். இது கோவில், மசூதி, குருத்வாரா போன்றது.
நீதித்துறையில் இருப்பவர்கள் அனைவரும் தேசத்துக்கும் உலகத்துக்கும் சொத்து. யாரையும் இழிவுபடுத்துவது எனது நோக்கமல்ல, நீதித்துறையில் அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீதித்துறை முற்றிலும் தூய்மையாகவும், நேர்மையாகவும், புனிதமாகவும் இருக்க வேண்டும். அதை மக்கள் வழிபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.