சென்னை: மின்சார ரயில்கள் ரத்து, நேர மாற்றத்தால் பிராட்வே – செங்கல்பட்டு இடையே கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இடங்களில் இருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு, 28 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று முதல் புதிய நேர அட்டவணை அமலுக்கு வந்தது. எனவே, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், பிராட்வேயில் இருந்து தாம்பரம் வழியாக வழக்கம்போல் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகள், தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதலாக 10 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் பயன்பெறும் வகையில் இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.