இந்தியாவில் காசநோயை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, 2025-க்குள் நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், காசநோய் ஒழிப்பு திட்டப் பணிகள், நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள காசநோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், களப்பணியாளர்கள் மூலம் அவர்களது வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை நெறிமுறைகளின்படி, அவர்களின் வீடுகளில் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, நடமாடும் ஊடுகதிர் இயந்திரங்கள் தேவைப்படுபவர்களுக்கு அனுப்பப்பட்டு ஊடுகதிர் படங்கள் எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் மேம்படுத்த பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் பேசியதாவது:- காசநோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் கீழ், இந்த திட்டத்தை இன்னும் தீவிரமாக செயல்படுத்த வேண்டியது அவசியம். அதை மனதில் வைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் சிகிச்சை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காசநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க எக்ஸ்ரே பரிசோதனையை ஆரம்பத்திலேயே மேற்கொள்ள வேண்டும். காசநோயாளிகளில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களைக் கண்டறிந்து, சரியான ஊட்டச்சத்தை உறுதி செய்ய வேண்டும். காசநோய் ஒழிப்புத் திட்ட ஆவணங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் செயல்பாடுகள் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.