சென்னை: ஃப்ரூட்டேரியன் டயட்டில் பலவகை உள்ளன. இந்த டயட்டை வீகன் டயட்டின் ஒரு அங்கம் என்று சொல்பவர்களும் உள்ளனர்.
100 சதவிகிதம் பழங்கள் மட்டுமே சாப்பிடுபவர்கள், பழங்களுடன் காய்கறிகள் மட்டும் சேர்த்துக்கொள்பவர்கள், பருப்புவகைகள், நட்ஸ் சேர்த்துக் கொள்பவர்கள் பழங்களையும் நட்ஸ்களையும் மட்டும் சாப்பிடுபவர்கள் என ஃப்ரூட்டேரியன் டயட்டைப் பின்பற்றுபவர்கள் பலவகையினராக உள்ளனர். பொதுவாக, அனைத்து வகையான பழங்கள், நட்ஸ்கள் மட்டும் சாப்பிடுவது ஃப்ரூட்டேரியன் டயட் என்று சொல்லலாம். கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச்சத்தை நீக்க வேண்டும் என்பது ஃப்ரூட்டேரியன் டயட்டின் நோக்கம். எனவே, காய்கறிகள், அசைவம் போன்றவை தவிர்க்கப்படுகின்றன.
அமிலச்சத்துள்ள பழங்கள் (Acid fruits): எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், ஆப்பிள், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, கிவி, பேரிக்காய்.
துணை அமிலச்சத்து உள்ள பழங்கள் (Subacid fruits) : செர்ரி, ரோஸ்பெர்ரி, நெல்லிக்காய், பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி, பீச், பியர்ஸ், நாவல் பழம், பப்பாளி, அத்தி, ஆப்ரிகாட்ஸ், மாம்பழம்.
இனிப்புப் பழங்கள் (Sweet fruits): வாழைப்பழம், திராட்சை, முலாம் பழம், கிர்ணிப்பழம், தர்பூசணி, பலாப்பழம். இதேபோல் முந்திரி, பாதாம், வால்நட், வாதாங்கொட்டை, பிஸ்தா, பைன் நட், ஹிக்கரி நட்ஸ் ஆகியவற்றை சாப்பிடலாம்.
சூரியகாந்தி விதைகள், எள்ளு, பூசணி விதைகள், பருத்தி விதை, பலாப்பழக் கொட்டைகள் போன்றவையும் ஆரோக்கியத்தை உயர்த்தும் தன்மை கொண்டது.