தமிழகத்தில் அரசு கேபிள் இணைப்புகளை பிப்ரவரி மாதத்திற்குள் 14 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் இணைப்புகளின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என அரசு கேபிள் டிவி ஆபரேட்டரும், தொழிலாளர் நல வாரிய தலைவருமான ஜீவா தெரிவித்தார்.
தஞ்சாவூர் காவிரி சிறப்பு அங்காடியில் செயல்படும் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலகத்தில் கேபிள் ஆபரேட்டர்களுக்கு புதிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வழங்கும் விழா நேற்று நடந்தது. அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர் மற்றும் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் ஜீவா, அரசு கேபிள் டிவி பொது மேலாளர் ம.துரை, துணை மேலாளர் கவுதமன், கேபிள் டிவி தாலுகா அலுவலர் ரத்தினவேல் ஆகியோர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ்களை வழங்கினர்.
பின்னர் வாரிய தலைவர் ஜீவா நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 50 லட்சம் ஹெச்டி செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது 14 லட்சம் அரசு கேபிள் டிவி இணைப்புகள் உள்ள நிலையில், பிப்ரவரி மாதத்திற்குள் இதை 25 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஓராண்டுக்குள் அரசு கேபிள் டிவி இணைப்புகளின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களாக இருந்த பலர், எச்டி செட்டாப் பாக்ஸ் இல்லாத நிலையில், அரசு கேபிளில் இருந்து தனியார் செட்டாப் பாக்ஸ்களுக்கு மாறி வருகின்றனர். தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சி செய்யப்பட்டு, அரசு கேபிள் டி.வி., எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை வினியோகித்து வருகிறது. இதனால் அரசு கேபிளுக்கு மாறியவர்கள் மீண்டும் அரசு கேபிள் டிவியை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.