சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது.
தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதி செய்தார்.
அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப்பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாக பேசினார், ஆனால் மிகுதியாக சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார்.
பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார். இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பை பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பாகவும் மன்மோகன் சிங் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த அனைத்து தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.