நடிகர் அஜித்தின் ‘அஜித் குமார் ரேசிங் டீம்’ துபாயில் நடைபெறும் ’24H சீரிஸ்’ கார் பந்தயத்தில் பங்கேற்கிறது. சில நாட்களுக்கு முன்பு இதற்காக பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அஜித் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், அவர் பந்தயத்தில் இருந்து விலகினார். ஆனால் அவரது அணி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், அஜித்குமார் ரேசிங் டீம் 991 பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. தேசியக் கொடியை ஏந்தி இந்த வெற்றியை அஜித் உற்சாகமாகக் கொண்டாடினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு இந்திய அணி சர்வதேச பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்தது பெரிய விஷயம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அவர்கள் பங்கேற்ற முதல் போட்டியிலேயே இந்த சாதனையைப் படைத்ததால், நடிகர் அஜித் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நடிகர் மாதவன் அஜித்தை நேரில் வாழ்த்தினார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள மாதவன், அஜித் குறித்து பெருமைப்படுவதாகக் கூறினார். இந்தப் போட்டிக்காக துபாய் சென்ற நடிகர்கள் அர்ஜுன் தாஸ், ஆரவ், வசந்த் ரவி, இயக்குநர்கள் விஷ்ணுவர்தன் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது X தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அஜித் குமார் சார் மற்றும் அவரது குழுவினர் 991 பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துக்கள். நமது நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் மேலும் பெருமை சேர்க்க அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.