கோவை: கோவை ‘எம்.எஸ்.எம்.இ.,’ நிறுவனங்களுக்கு, மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் வழங்க, ‘சி.ஐ.ஏ.,’ தொழில் அமைப்பு கருத்தரங்கில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. சின்னவேடம்பட்டி தொழில்கள் சங்கம் (சிஐஏ) சார்பில் தொழில் மேம்பாட்டு கருத்தரங்கம் கோவையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு ‘சிஐஏ’ தலைவர் தேவகுமார் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகம் சிவா தலைமை தாங்கினார். கோவை மாவட்ட சிறுதொழில் சங்க (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார். தேசிய உற்பத்தி கவுன்சில் துணை இயக்குனர் விஜயராஜூ, ‘ஏசிடி’ இயக்குனர் பிரித்தி சதாசிவானி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தீர்க்கவும், அடிப்படை கட்டமைப்பு தேவைகளை விரைவில் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு மானிய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.