பெங்களூரு: இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம் மற்றும் 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் அளித்த துர்கப்பா, போவி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அந்த புகாரில், “நான் இந்திய அறிவியல் மையத்தின் நிலையான தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்தேன். 2014-ல், போலியான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டேன். அப்போது சாதிய அவமதிப்பு மற்றும் மிரட்டல்களுக்கு ஆளானேன்.
கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியார், சந்தியா விஸ்வரய்யா, ஹரி கேவிஎஸ் தாசப்பா, பலராம் பி, ஹேமலதா மிஸ்ஸி, சதோபாத்யாயா, பிரதீப் சாவ்கர் மற்றும் மனோகரன் ஆகியோர் மீதும் துர்கப்பா இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்திய அறிவியல் கழகம் அல்லது அதன் முன்னாள் அறங்காவலர் குழு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை.