புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல் அமர்வு பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது அமர்வு மார்ச் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி முடிவடையும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். பட்ஜெட்டின் முன்னோட்டமாக கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையும் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் தொடர்ந்து 8 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுவார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஜே.பி.நட்டா, அர்ஜூன் ராம் மேக்வால், எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ், கௌரவ் கோகோய், திரிணாமுல் காங்கிரஸின் சுதிப் பந்தோபாத்யாய் மற்றும் டெரிக் ஓ பிரையன், திமுகவின் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகள் சார்பில் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கு அரசு இந்த கூட்டத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
இந்த அமர்வில், நிதி மசோதா 2025, வக்ஃப் மசோதா, வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா, இந்திய ரயில்வே மற்றும் இந்திய ரயில்வே வாரிய சட்ட ஒருங்கிணைப்பு மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பான நிதி நலன்களைப் பாதுகாப்பதற்கான மசோதாக்கள், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர்களின் தற்போதைய விதிகளை மாற்றுவதற்கான மசோதாக்கள் மற்றும் கோவா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பதற்கான மசோதா ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள குழப்பமான வரி முறைகளை எளிதாக்கும் வகையில் வருமான வரி தொடர்பான புதிய நேரடி வரிக் குறியீடு மசோதாவும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதச் சம்பளம் பெறுவோர் ஆவலுடன் எதிர்பார்க்கும் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ. 10 லட்சம் அதிகரிக்கப்படலாம். மேலும் 2 புதிய வரி வகைகள் சேர்க்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் பட்ஜெட்டில் மூலதனச் செலவுக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்களின் செலவழிப்பு வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார சுழற்சியைத் தூண்டும் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது. எர்ன்ஸ்ட் அண்ட் யங் அறிக்கையின்படி, நிதிப் பற்றாக்குறையை மார்ச் 2026 இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக கட்டுக்குள் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்படலாம்.