டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆணையம் சார்பில் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 36 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 37-வது கூட்டம் டெல்லியில் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கோடைகால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.