புதுச்சேரி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி திட்டம்: புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மாநிலத்தில் நிதித்துறை பொறுப்பில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ரூ.13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றினர்.
அப்போது அவர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்: விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும். அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு வாரம் மூன்று நாள் மட்டும் வழங்கப்படும் முட்டை, இனிமேல் தினந்தோறும் வழங்கப்படும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். புதுச்சேரி மத்திய சிறைச்சாலை முழுமையாக கணினி மயமாக்கப்படும். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்படும்.
மீனவ சமுதாய பெண்கள் உயிரிழந்தால் ஈமச்சடங்குகளுக்காக வழங்கப்பட்டு வரும் நிதி ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.