திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஆண்டை விட இந்த முறை பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தினமும் சராசரியாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் வண்டிப்பெரியார், எருமேலி, பம்பை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உடனடி முன்பதிவு கவுன்டர்களில் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 2 வாரங்களில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 9.50 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது.
இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் சரங்குத்தி வரை பக்தர்கள் வரிசையாக காணப்பட்டனர். இதனால், பக்தர்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நெய்யபிஷேகம் செய்யவும், அரவணை, அப்பம் பிரசாதம் வாங்கவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணலாம். இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், நாளை முதல் வார இறுதி நாட்களானதாலும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்து கவிழ்ந்ததில் 15 பக்தர்கள் காயமடைந்தனர் திருத்தணியை சேர்ந்த 20 பக்தர்கள் நேற்று பஸ்சில் சபரிமலைக்கு வந்து கொண்டிருந்தனர். பாலக்காடு வடகஞ்சேரி அருகே எதிர்பாராதவிதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதி கவிழ்ந்தது. இதில், 15 பேர் காயமடைந்தனர். அவர்களில் 9 பேர் ஆலத்தூர் அரசு மருத்துவமனையிலும், 6 பேர் பாலக்காடு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் எவரது நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.