சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
வெளியானது முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கருப்பு’, பல்வேறு பகுதிகளில் வசூல் சாதனையும் படைத்ததாக கூறப்படுகிறது. 100 நாட்களை நிறைவு செய்ததையடுத்து தயாரிப்பு நிறுவனம் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளது.
இதையடுத்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், ‘கருப்பு’ திரைப்படத்தை ரசிகர்கள் தங்களது சொந்தப் படமாக ஏற்றுக்கொண்டு கொண்டாடியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும், படம் 100 நாட்களை நிறைவு செய்ததை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு 100 நாட்களை கடந்த திரைப்படத்தில் நடித்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
