சென்னை: ‘அந்தரன்’ திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், தனது வெற்றிக்காக மனைவி சாண்ட்ராவும் காத்திருப்பதாகவும் நடிகர் பிரஜின் தெரிவித்துள்ளார்.
‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார்.
கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க, சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில், வரும் 25-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘அந்தரன்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சி.வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி, ‘விக்கல்ஸ்’ விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில் பிரஜின் பேசுகையில், “இருபது ஆண்டுகளாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறேன். சினிமா வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள், வெற்றி, தோல்வி மாறி மாறி வருகிறது.
ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள். நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். என் மனைவி சாண்ட்ராவும் என் வெற்றிக்காக காத்திருக்கிறார்” என்றார்.
இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில், “நான் படப்பிடிப்பு தளத்தில் நாயகியுடன் நேரடியாக பேசியதே இல்லை. ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்கு தெரியாது. நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு புரியாது. அதனால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த உதவியாளரின் மூலமாகவே அவருடன் பணியாற்றினேன்.
‘அந்தரன்’ என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என்று பொருள். நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் கவனிக்காமல் கடந்து செல்லும் ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம்.
இந்த திரைப்படம் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படம் வெற்றி பெற்ற பிறகு அதுகுறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். இது திரில்லர் கதையாக இருந்தாலும், ரொமான்டிக்காக சொல்லப்பட்டுள்ளது” என்றார்.