சென்னை: பவிஷ் நாராயண் ஹீரோவாக நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம் ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடித்துள்ளார். மகேஷ் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இவர் இயக்குநர் லஷ்மணிடம் ‘போகன்’, ‘பூமி’ ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இப்படத்தில் இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ஸினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இன்றைய இளைஞர்களின் உணர்வுகளை நவீன கோணத்தில், மனதைத் தொடும் வகையில் சொல்லும் காதல் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், பின்னணி பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ‘லவ் ஓ லவ்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.