சென்னை: மலையாள நடிகர் நஸ்லெனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சூர்யா 47’ படக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான நஸ்லென், ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றார். தொடர்ந்து வெளியான அவரது படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
தற்போது சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 47’ திரைப்படத்தில் நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜித்து மாதவன் இயக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா நசீமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இந்தப் படத்தை ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது. சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நஸ்லெனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. “படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் புன்னகையையும் ஆற்றலையும் கொண்டு வரும் நஸ்லனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளது.