சென்னை: ‘டிஎன் 2026’ திரைப்படம் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நடிகர் நட்டி நடராஜ், தன்னை வசைபாடுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக உயர்ந்த நட்டி நடராஜ், ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், சமீபத்தில் உமாபதி ராமையா இயக்கிய ‘டிஎன் 2026’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த திரைப்படம், டீசர் வெளியான தருணத்திலிருந்தே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக அரசியல் மற்றும் நடிகர்களை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் வசனங்கள் இடம்பெற்றதாக சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்தது.
நட்டி நடராஜின் தோற்றம் நடிகர் விஜயை நினைவூட்டும் வகையிலும், தம்பி ராமையாவின் தோற்றம் தவெக நிர்வாகியை ஒத்த வகையிலும் அமைந்திருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், நட்டி நடராஜ் தனது சமூக வலைத்தள பதிவுகளில், “யாராவது என்னிடம் ஆபாச மொழிகளை பயன்படுத்தினால் நானும் அதேபோல் பதிலளிப்பேன்” என்றும், “இது கடைசி எச்சரிக்கை. இனிமேல் என்னை வசைபாடினால் நானும் வசைபாடுவேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதனால் நட்டி நடராஜ் மீண்டும் சர்ச்சையின் மையமாகியுள்ளார்.