சென்னை: சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ.340 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் சுவாசிகா, யோகி பாபு, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கோடை விடுமுறை காலத்தில் வெளியான இந்த திரைப்படம், குடும்ப ரசிகர்களின் ஆதரவால் தொடர்ந்து வசூல் ஈட்டி வருகிறது. சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் பெற்ற படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது.
படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்களை சூர்யா பரிசாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ.340 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.