சென்னை: நடிகர் அதர்வா நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான அதர்வா, பல்வேறு வெற்றிப் படங்கள் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நடராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளதுடன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அண்மையில் படத்தின் டப்பிங் பணிகளை அதர்வா நிறைவு செய்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது.
இந்நிலையில், ‘வான் வான்’ பாடலின் படப்பிடிப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 10-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் முரளியின் மகனான அதர்வாவுக்கு, அவரது தந்தையின் வெற்றிப்படத்தை நினைவூட்டும் வகையில் ‘இதயம் முரளி’ திரைப்படம் அமைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.