சென்னை: தேங்காய், வெங்காயம் மற்றும் தக்காளி, பூண்டு சட்னிகளை சாப்பிட்டு இருப்போம். பச்சை பப்பாளி சட்னி சாப்பிட்டு இருக்கிறீர்களா. இது மா சட்னியைப் போலவே இருக்கும். பார்ப்பதற்கு இந்த சட்னி பிளாஸ்டிக் போன்ற அமைப்பில் இருப்பதால் பிளாஸ்டிக் சட்னி என்று அழைக்கப்படுகிறது.
தேவையானவை
1½ கப் – பப்பாளி சிறிய சில்லுகளாக வெட்டவும் அல்லது அரைக்கவும்
1½ கப் – நீர்
¼ டீஸ்பூன் – உப்பு
7 டீஸ்பூன் – சர்க்கரை
2 டீஸ்பூன் – எலுமிச்சை சாறு
சிறிதளவு திராட்சை
செய்முறை: முதலில் பப்பாளியை உரித்து பாதியாக வெட்ட வேண்டும். பின்னர் பப்பாளிக்குள் இருக்கும் விதைகளையும் கடினமான தோலையும் அகற்ற வேண்டும். பின்னர் மெல்லிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தொடர்ந்து பப்பாளியை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
ஒரு கடாயை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்து வரும் போது பப்பாளியை சேர்க்கவும். பின்னர் நன்றாக கிளறவும். அதோடு தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டும். பிறகு ஐந்து நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.
பப்பாளி நன்றாக மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் சிறிதளவு திராட்சை சேர்த்து மீண்டும் வேக வைக்க வேண்டும். இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து மற்றொரு 3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பப்பாளி நன்றாக வெந்து சிகப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்படி வந்த பிறகு சில நிமிடங்கள் குளிர வைக்க வேண்டும். இப்போது அருமையான சுவையில் பப்பாளி சட்னி தயார்.