சென்னை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.80 லட்சம் உயரிய ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் வழங்கி பாராட்டினார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.
ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீரர் பிரவீன் சித்ரவேலுக்கு ரூ.30 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் இந்த ஊக்கத்தொகையை வழங்கினார். பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு ஆகியோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் விடுதி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விளையாட்டு வீரர்களுக்கு உரிய பயிற்சி, உயரிய ஊக்கத்தொகை மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
