பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் – சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், இந்திய அணி வலுவான முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்த இந்திய அணி, இங்கிலாந்தை 407 ரன்களுக்கு சுருட்டியது. இதில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணிக்காக முக்கிய பங்கு வகித்தார்.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் தொடக்கத்தில் தடுமாறியது. சிராஜின் தீவிர பந்துவீச்சில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் விரைவாக வெளியேற, அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் இணைந்து 303 ரன்கள் சேர்த்து இங்கிலாந்தை மீட்டனர். ஸ்மித் 184 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார், புரூக் 158 ரன்கள் எடுத்தார். ஆனால் அதன் பின், சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சு மீண்டும் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை சுருட்டியது.
இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை 180 ரன் முன்னிலையுடன் தொடங்கியது. தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (28) மற்றும் ராகுல் நன்றாக விளையாடினர். ஆட்டநேர முடிவில் இந்தியா 64/1 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் (28) மற்றும் கருண் (7) அவுட்டாகாமல் களம் பிடித்துள்ளனர். தற்போது இந்தியா 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் முக்கியமாக, சிராஜ் தனது டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2024ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் இதே வெற்றியைப் பெற்றிருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 6 பேட்டர்கள் ‘டக்-அவுட்’ ஆனதும் இதுவே முதல் முறையாகும்.