மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் குப்பைகளால் மாசடைந்த ஆற்றை பல மாதங்களாக தனி ஆளாக சுத்தம் செய்து வந்த 20 வயது இளைஞருக்கு, நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் நேரடியாக வேலை வாய்ப்பு வழங்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் சவுத்ரி என்ற பிட்டு தபாஹி, அஜ்னார் ஆற்றில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாசி மற்றும் இதர குப்பைகளை கடந்த ஜனவரி மாதம் முதல் தனது சொந்த செலவில் அகற்றி வந்துள்ளார். சுமார் ரூ.30 ஆயிரம் வரை தனது சொந்த பணத்தை செலவிட்டு ஆற்றை சுத்தம் செய்ததாக கூறப்படும் அவரது முயற்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
கடல்கள் மற்றும் ஆறுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் ‘தி ஓஷன் கிளீனப்’ என்ற நெதர்லாந்து அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி போயன் ஸ்லாட், பிட்டுவின் பணியை கவனித்து அவரை தங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு முன்பு, சமூக வலைதளங்களில் சிலர் அவரது பணியை விமர்சித்திருந்தனர். அதற்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஆதரவு தெரிவித்திருந்தார்.
சமூக வலைதளங்களை நல்ல செயலுக்காக பயன்படுத்தினால் அது வரவேற்கத்தக்கது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது பிட்டுவின் அர்ப்பணிப்புக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதுடன், அவரது வாழ்க்கையை மாற்றக்கூடிய வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளதால் இணையவாசிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
