சென்னை: தமிழகத்தில் உள்ள கடைகளில் நவம்பர் 1-ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.
பெயர் பலகையில் முதலில் தமிழில் பெயர் இடம்பெற வேண்டும் என்றும், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் பெயரை வைத்துக்கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்திருந்தது. விதிமுறைகளை மீறினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கடைசி வாய்ப்பாக நவம்பர் 1-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெயர் பலகைகளை மாற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
