ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மத்திய காஷ்மீரின் யூஸ்மார்க் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி, பாகிஸ்தானைச் சேர்ந்த யாசிர் என்பதும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய உறுப்பினர் என்பதும் தெரியவந்துள்ளது.
பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கடந்த 2024-ம் ஆண்டு ராணுவத்தினர், பொதுப்பணித் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் யாசிருக்கு தொடர்பு இருப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் பதுங்கியிருக்கக்கூடிய மற்றொரு பயங்கரவாதியை பிடிக்கும் நடவடிக்கையில் ராணுவத்தினரும் போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
