சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களும் அரசும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஆகஸ்டு 30-ம் தேதி வரை தமிழகத்தில் 13,573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாதந்தோறும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜூன் மாதத்திலிருந்து நோய் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. ஜூலையில் 2,339 பேரும், ஆகஸ்டில் 3,315 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்ச டெங்கு பாதிப்பு சென்னையில் பதிவாகியுள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பதிவான மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 2,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 1,999 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் பன்றிக் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது நடப்பாண்டில் பாதிப்பு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மழைக்காலம் தொடங்க உள்ளதால் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
சென்னையில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகவும், பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
