புதுடெல்லி: 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக் கால ரெயில் பயணத்திற்கான முன்பதிவு செப்டம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.
இந்திய ரெயில்வேயின் முன்கூட்டிய முன்பதிவு விதிகளின்படி, பயணத் தேதியைத் தவிர்த்து 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள் இன்று முதல் தங்களது ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
பண்டிகைக் கால கடைசி நேர நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு டிக்கெட்டுகளை பதிவு செய்யுமாறு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் டெல்லி–பாட்னா, மும்பை–பாட்னா, ஹவுரா–பாட்னா, பெங்களூரு–பாட்னா, சென்னை–பாட்னா, ஹைதராபாத்–பாட்னா, டெல்லி–கோரக்பூர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் டிக்கெட்டுகளுக்கு அதிக தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டிகைக் கால பயணிகள் நெரிசலை சமாளிக்க பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
