உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் இந்த பரவல் நிலைமை மீண்டும் கவலைக்கிடம் ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிறிது சிறிதாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தாலும், மாநிலங்களின் மருத்துவ துறைகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில், சமீபமாக பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பெங்களூருவில் மட்டும் 32 கொரோனா தொற்று வழக்குகள் உறுதி செய்யபட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 35 செயலில் உள்ள வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த இருபது நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், உடல்நலக்குறைவுடையோர் போன்றோர் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நெரிசல் அதிகமுள்ள இடங்களில் முககவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஒன்பது மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த மே 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. குழந்தை தற்போது வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை நிலைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத் துறை இதுவரை 2025 ஆம் ஆண்டு எந்த ஒரு கொரோனா தொடர்பான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும், முககவசம், கை சுத்திகரிப்பு உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த மே 19 ஆம் தேதி நிலவரப்படி 257 செயலில் உள்ள வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டால் குறைவாக இருந்தாலும், தற்போதைய எண்ணிக்கையின் அதிகரிப்பு பரவலான கவனத்தை ஈர்க்கிறது.
கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், தற்போதைய பரவல் நிலையை மதிப்பீடு செய்து, தேவையான இடங்களில் தடுப்பூசி போடுவதையும், சோதனைகளை அதிகரிப்பதையும் பரிசீலிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
மாநில மக்கள் கொரோனா குறித்த அலட்சியம் காட்டாமல், வழிகாட்டல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தற்போதைய சூழ்நிலையின் முக்கியமான செய்தியாகிறது.