புதுடெல்லி : மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்திய கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக பேட்டியளித்துள்ள கே.சுரேஷ் கூறியிருப்பதாவது:-
இந்த தேர்தலில் இந்திய கூட்டணி போட்டியிடும் கட்டாயத்தை உருவாக்கியது அரசு தான். லோக்சபா சபாநாயகர் தேர்தலுக்காக ஆளுங்கட்சியினர் எங்களை அணுகியபோது, எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால் சபாநாயகர் தேர்தலை ஆதரிப்போம் என்றோம்.
ஆனால் காலை 11.30 மணி வரை இது தொடர்பாக எந்த உறுதியும் தெரிவிக்கவில்லை. மேலும், அவர்களின் பதில் திருப்திகரமாக இல்லை. எனவே எங்கள் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைமையின் பிடிவாதத்தை இந்த தேர்தல் காட்டுகிறது. அந்த பிடிவாதத்தை கைவிட்டிருந்தால் இந்த தேர்தலுக்கு தேவையே இருந்திருக்காது.
எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க விரும்பவில்லை. இந்தத் தேர்தலை நடத்துவதற்கான முழுப் பொறுப்பும் தேசிய ஜனநாயக கூட்டணியை சாரும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, மக்களவை சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கே.சுரேஷுக்கு ஆதரவு அளிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
லோக்சபா சபாநாயகர் வேட்பாளரை காங்கிரஸ் தன்னிச்சையாக அறிவித்ததாக நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பின்னர் மம்தா பானர்ஜியுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார்.
இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சுரேஷுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 262 புதிய எம்.பி.க்களுக்கு மக்களவையின் தற்காலிக சபாநாயகர் மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து நேற்று 281 எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். புதிய மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும், மக்களவை சபாநாயகர் ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.