புது டெல்லி: நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இந்த வார இறுதியில் டெல்லியில் போராட்டம் நடத்தத் தயாராகி வருவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே ஜூன் 6-ஆம் தேதி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், புது டெல்லியில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் முதல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், “நாங்கள் அனைவருக்கும் வெளிப்படையான அழைப்பை விடுத்துள்ளோம். கட்சிச் சின்னம் அல்லது பதாகைகள் ஏதுமின்றி யார் வேண்டுமானாலும் எங்களுடன் போராட்டத்தில் இணையலாம்.
அதிகாரத்தில் இருப்பவர்களோ அல்லது எதிர்க்கட்சியினரோ, யாராக இருந்தாலும் சரி, அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஜூன் 2 அன்று சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகியோரை இடமாற்றம் செய்ய மத்திய அரசு எடுத்த முடிவு ஒரு கண்துடைப்பு நாடகம். இதனால் பிரச்சினைகள் தீராது. நாங்கள் இந்த பிரச்சினைக்கு பொறுப்புடைமையை வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.