புதுடில்லி:தடையை நீக்க மறுப்பு… முறைகேடு குற்றச் சாட்டுகளைத் தொடர்ந்து, டில்லி பார் கவுன்சில் தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பான மனுக்களை மே 25ம் தேதி டில்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டில்லி பார் கவுன்சில் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் கடும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மனு தாக்கல் இந்நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி முடிவெடுக்கும் வரை, ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், பிரேந்தர் சங்வான் என்பவர் உள்ளிட்டோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், மே 18ல், உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய் மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”இந்த மனுக்களை டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி, சிறப்பு அமர்வு அமைத்து விசாரிக்க வேண்டும். அதற்கேற்ப வழக்கை பட்டியலிட்டு, தினசரி விசாரணை அடிப்படையில் விசாரிக்க வேண்டும்.
”எனவே, தற்போதைய நிலையை தொடரும் வகையிலும், உயர் நீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பிக்கும் வரை ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திருத்த வேண்டும் என்று வலியுறுத்தி, மூத்த வக்கீல் விகாஸ் சிங் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாம்மால்யா பாக்சி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இறுதி உத்தரவு அப்போது ஆஜரான விகாஸ் சிங், ” ஓட்டு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடிவடையட்டும். உயர்நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியிடப்படாது,” என்று கூறினார்.
இதை நிராகரித்த நீதிபதிகள், தடையை விலக்கவும் மறுத்தனர். நீதிபதிகள் உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற மாட்டோம். டில்லி பார் கவுன்சில் தேர்தல்கள் தொடர்பாக கடுமையான பிரச்னைகள் உள்ளன. முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓட்டுக்களை எண்ண அனுமதிக்க முடியாது.
இந்த விவகாரம் அவசரமானது என்பதால், இந்த வழக்கை, டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உடனடியாக, வரும் 25ம் தேதி, ஒரு டிவிஷன் பெஞ்ச் முன் பட்டியலிட வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைத்து வாதங்களையும் முன்வைக்க சுதந்திரம் உண்டு. இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.