சென்னை: தமிழக அரசியலில் கவனம் ஈர்த்த மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சட்டமன்றத்தில் அக்கட்சியின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் கே. மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். தாராபுரம் தொகுதியில் பி. சத்யபாமா வெற்றி பெற்றார். இருவரும் ஏற்கெனவே அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த நிலையில், தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனை 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தாராபுரத்தில் சத்யபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் எஸ். சுகன்யா 57,370 வாக்குகளைப் பெற்றார்.
இரு தொகுதிகளிலும் கிடைத்த வெற்றி, தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற முதல் இடைத்தேர்தலில் கிடைத்த முக்கிய அரசியல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த முடிவுகள் தமிழகத்தின் எதிர்க்கட்சிகளிடையே புதிய அரசியல் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
