சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றின.
இதனைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் விஜய், தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல; அது சிந்தனை, பண்பாடு, நாகரிகம் என்றும், தமிழ் தங்களின் உயிர் மற்றும் உணர்வு என்பதை தமிழ்நாடு அரசு முழுமையாக உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ள அவர், தீர்மானத்துக்கு ஒருமனதாக ஆதரவு அளித்த அனைத்துக் கட்சிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
