கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்திற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கர்நாடக வனத்துறை தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் வேட்டையாடச் செல்லவில்லை என்றும் அப்பாவிகள் என்றும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், மோதல் சாவு என்பது சரியான நடைமுறை அல்ல என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
