சென்னை: தமிழகத்தின் விவசாயம், குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக காவிரி நீரை உடனடியாக திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலிடம் நாகை எம்.பி. செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்து அவர் அளித்துள்ள மனுவில், காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயம் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை அமைப்புகளால் அறிவிக்கப்பட்டுள்ள நீரளவை, தமிழகத்தின் தற்போதைய குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு எந்த தாமதமும் இல்லாமல் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்கே கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழகத்தின் நியாயமான நீர்ப்பங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக மாநிலத்தில் முன்மொழியப்பட்டுள்ள மேகதாது அணைத் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தமிழகத்துக்கு மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட கீழ்ப்பகுதி மாநிலங்களின் குடிநீர் மற்றும் அத்தியாவசிய நீர்த்தேவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
