சென்னை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நில மோசடி வழக்கில் சிறையில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பழனி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதற்கு முந்தைய நாளே வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே வழக்கில் தொடர்புடைய இருவர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவுக்கு ஆளாகியிருப்பது குறித்து அரசு மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பழனி கோயில் நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தால், அதன் பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆவணங்களைத் தயாரித்தவர்கள், இடைத்தரகர்கள், அதிகாரிகள் என வழக்கில் தொடர்புடைய அனைவரின் பங்களிப்பும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே ஒருவரை குற்றவாளியாக கருதுவதும், விசாரணை என்ற பெயரில் சட்ட நடைமுறைகள் மீறப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சிறையில் அன்வர்தீன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எந்தவித சந்தேகத்திற்கும் இடமளிக்காத வகையில் சுயாதீனமான, நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். உடற்கூறாய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டு, மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து அரசு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது; குற்றமற்றவர்கள் யாராக இருந்தாலும் பலிகடாவாக முடியாது” என்ற நிலைப்பாட்டை அரசு உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
