சென்னை : பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தமிழக காம் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 36 வீராங்கனைகள் உட்பட 42 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய கபடி போட்டியில் பங்கேற்க பஞ்சாப் சென்றுள்ளனர்.
போட்டியில் விதிகளை மீறியதாக முறையிட்ட தமிழக வீராங்கனைகள், தமிழக பயிற்சியாளர் பாண்டியன் மீது பஞ்சாப் போட்டியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே கபாடி போட்டியின் போது ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதைக் கண்டித்து கேள்வி எழுப்பிய தமிழக கபாடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும் தமிழ்நாட்டின் கபாடி பயிற்சியாளரை கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, நம் மாநில விளையாட்டு வீரர்களை பாதுகாக்க வேண்டுமெனவும், பஞ்சாபில் இருந்து அவர்களை பத்திரமாக அழைத்து வரவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.