சென்னை: அடுத்த 5 ஆண்டுகளில் சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுகவின் தனி தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்டத்துக்கான திமுகவின் தனி தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் 6′ என்ற பெயரில் 6 தலைப்புகளில் 20 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.
மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும். அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தரப் பண்பாட்டு மையம் அமைக்கப்படும். பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும். எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10-க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும். மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028-க்குள் முடிக்கப்படும். மழைநீர் வடிகால்கள் 2028-க்குள் முடிக்கப்படும். பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027-க்குள் முடிக்கப்படும்.
அழகான சாலைகள், அகலமான நடைபாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029க்குள் அமைக்கப்படும்.
விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு (ABC) திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.