சென்னை: விஜய்யை வீழ்த்த ஒன்றிணையும் வாழ்நாள் எதிரிகள் என்று காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
விஜய் என்ற மனிதனை வீழ்த்த வாழ்நாள் எதிரிகளான இரண்டு திராவிட கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள். தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை. ஒரே ஒரு மனிதனை நிறுத்த, விஜய்யை வீழ்த்த நடக்கும் முயற்சியை காங்கிரஸ் தெளிவாக பார்த்தது, வெளியேறியது. ஆர்எஸ்எஸ், பாஜகவின் பி-டீமுடன் சேர்ந்து கொண்ட உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.
‘நிலையான அரசு’ என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? யார் துரோகி?” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6-ம் தேதி வழங்கினர். இது திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.