புதுடில்லி: பக்ரீத் பண்டிகை வரும் 28ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், டில்லியில் பசுக்கள், ஒட்டகங்கள் உள்ளிட்ட விலங்குகளை பலியிடுவது சட்டவிரோதமானது எனவும், அச்செயலில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டில்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், டில்லி மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் மிஸ்ரா நேற்று வெளியிட்ட அறிக்கை:
பக்ரீத் பண்டிகையையொட்டி, டில்லி அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைவரும் அமைதியான முறையில் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன். இதன்படி பசு, ஒட்டகம் உள்ளிட்ட சட்டப்படி தடை செய்யப்பட்ட விலங்குகளை பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது.
தெருக்கள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், திறந்தவெளி இடங்கள் என பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விலங்குகளை பலியிடவும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. டில்லி அரசால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குர்பானி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி இயங்கும் சந்தைகள் மீதும், அங்கு விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு ஈடுபடுவதை தடுக்கும் வகையில் டில்லி அரசு சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
சட்டவிரோதமாக விலங்குகளை விற்பனை செய்வதுடன், பலியிடுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் விலங்குகளின் கழிவுகளை, திறந்தவெளியில் அல்லது வடிகால்களில் கொட்டுவதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.