சென்னை: நிதியை உயர்த்த வேண்டும் … பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு நிதியை உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திஷா கூட்டத்தில் விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுவின் (திஷா) மாநில அளவிலான ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற எம்.பி.க்கள், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விசிக தலைவர் திருமாவளவன்: ‘நூறு நாள் வேலை திட்டத்தில் 100 நாட்களும் வேலை வழங்க வேண்டும். ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை அட்டைகளை நீக்கம் செய்ய கூடாது’ என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தினோம். பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினருக்கு ரூ.8 லட்சம் வரம்பாக வைத்திருக்கும் நிலையில், ஓபிசி பிரிவினருக்கு ரூ.2 லட்சமாகவும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.2.50 லட்சமாகவும் உள்ளது.
இதே நிலை நீடித்தால் ஓபிசி உள்ளிட்ட பிரிவினரின் உயர்கல்வி தடுக்கப்படும். எனவே, ஓபிசி மாணவர்களுக்கு ரூ.8 லட்சமாகவும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.10 லட்சமாகவும் வருமான வரம்பை உயர்த்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பழங்குடியினருக்கான வீடு கட்டும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். தமிழக அரசின் ‘நன்னிலம் மகளிர் நில உடைமை’ திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி கிராமங்களை சாலைகளால் இணைக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.