பழனி: ஆளுநரை தபால்காரர் என ஸ்டாலின் கூறுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பழனிக்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுத சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆளுநரை மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான தபால்காரர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல. நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என கூறி இருப்பது அவருடைய சொந்த கருத்து. மேலும் அ.தி.மு.க. தொடர்பான கேள்விகள் வேண்டாம் என்றார்.
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாடு முழுவதும் நீட் தேர்வு முறை கொண்டு வந்தது தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி. நீட் தேர்வை முன் மொழிந்தது தி.மு.க. எம்.பி.யாக இருந்த காந்தி செல்வன். தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியின்போது 2013ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்றது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு காரணமாகவே நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு செய்யாமல் முதலமைச்சர் நாடகமாடுகிறார். டாஸ்மாக்கில் ஊழல் செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் சிறை செல்வது உறுதி. டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மதுபான ஊழலில் சிறை சென்றார். அதே போல் தமிழகத்திலும் நடக்கும். தமிழகம் முழுவதும் வளைத்து வளைத்து கஞ்சாவை பிடிக்கும் தமிழக போலீசார் சிந்தடிக் போதைப் பொருட்களை கண்டுகொள்ளவில்லை என்று தமிழக ஆளுநர் கேட்ட கேள்விக்கு இதுவரை தமிழக முதலமைச்சர் பதில் சொல்லாதது ஏன்? என்றார். அவருடன் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.