மதுரை: கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவர், பட்டியலினத்தவர் என்ற அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் தென்கரையைச் சேர்ந்த ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில், தான் இந்து ஆதிதிராவிடர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
பள்ளியில் ஜாதி பாகுபாடு காரணமாக பள்ளி முதல்வர் தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், பழிவாங்கும் நோக்கில் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, மனுதாரர் கடந்த 2015-ம் ஆண்டு தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
ஒருவர் வேறு மதத்தை பின்பற்றி அதன்படி வாழ்ந்து கொண்டே, சட்டரீதியான சலுகைகளைப் பெற பட்டியலின அந்தஸ்தை கோர முடியாது என நீதிபதி தெரிவித்தார். 1950-ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி, இந்து, சீக்கியர் அல்லது புத்த மதத்தைச் சாராதவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படமாட்டார் எனக் குறிப்பிட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.
