கீரமங்கலம்: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஊரின் நுழைவாயிலில் பல ஆண்டுகளாக அடையாளமாக இருந்த பழமையான ஆலமரம் சாலை விரிவாக்கப் பணிக்காக வேரோடு அகற்றப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு சாலையோரங்களில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரம், அரசமரம், புளியமரம் போன்றவை பயணிகளுக்கு நிழல் வழங்கியதுடன், அந்தந்த ஊர்களின் அடையாளமாகவும் இருந்து வந்தன.
சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக இத்தகைய பழமையான மரங்கள் அகற்றப்படும் நிலையில், அதற்கு மாற்றாக நடப்படும் புதிய மரக்கன்றுகள் வளர்ந்து முழுமையான நிழல் தருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் சாலையோரங்களில் வெப்பம் அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
போத்து நடவு செய்ய வேண்டும்
பழமையான மரங்களை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவற்றின் கிளைகளை போத்துகளாக வெட்டி குளக்கரை, சாலையோரம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களில் நடவு செய்து பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2015-16 காலகட்டத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஐ.ஏ.எஸ். பல்வேறு பகுதிகளில் போத்து நடவு மூலம் மரங்களை வளர்க்கும் முயற்சிக்கு ஊக்கம் அளித்ததாகவும், அந்த முயற்சியில் நடப்பட்ட சில போத்துகள் தற்போது மரங்களாக வளர்ந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், கீரமங்கலம் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட ஆலமரத்தை, அருகிலுள்ள வீரராகவமணி குளக்கரையில் மீண்டும் நடவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அகற்றப்பட்ட மரத்தை கிரேன் உதவியுடன் பாதுகாப்பாக எடுத்துச் சென்று குளக்கரையில் நடவு செய்தால், அதன் உயிரை காப்பாற்றும் வாய்ப்பு இருப்பதாக மர ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
“ஊரின் அடையாளமாக இருந்த ஆலமரத்தை முழுமையாக இழக்காமல், மீண்டும் நடவு செய்து பாதுகாக்க நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்” என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
