சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் வாழ்ந்த பண்டைய மக்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்கு சான்றாக, அகழாய்வுகளில் தொடர்ந்து பல அடுக்குகள் கொண்ட உறைகிணறுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
கீழடியில் நடைபெற்று வரும் ஒவ்வொரு கட்ட அகழாய்விலும் இரண்டு முதல் ஏழு அடுக்குகள் வரையிலான உறைகிணறுகள் கிடைத்துள்ளன.
இந்த உறைகிணறுகள் குடிநீர் தேவைக்கு மட்டுமல்லாமல், பாசனம் மற்றும் சாயத்தொழில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் 11-வது கட்ட அகழாய்வில் ஒரே குழியில் அடுத்தடுத்து மூன்று விதமான வடிகால் அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஏற்கனவே இரண்டு அடுக்கு உறைகிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவதாக கண்டறியப்பட்ட உறைகிணற்றில் எட்டு அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளன.
இந்த உறைகிணறு பெரும்பாலும் சேதமடையாமல் இருப்பதால், மேலும் பல அடுக்குகள் இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து, கீழடியில் தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
