சென்னை: சென்னை மாநகராட்சியில் 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்து வரி மற்றும் தொழில் வரியாக மொத்தம் ரூ.1,446.75 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனங்களில் சொத்து வரி மற்றும் தொழில் வரி முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், முதல் அரையாண்டில் சொத்து வரியாக ரூ.1,124.69 கோடியும், தொழில் வரியாக ரூ.312.06 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளன.
சொத்து வரியை 9.20 லட்சம் சொத்து உரிமையாளர்களும், தொழில் வரியை 45 ஆயிரம் வணிகர்கள் மற்றும் தனிநபர்களும் முழுமையாக செலுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, சொத்து வரி வசூலில் 12.95 சதவீதமும், தொழில் வரி வசூலில் 6.89 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
முதல் அரையாண்டின் கடைசி நாளான செப்டம்பர் 30-ம் தேதி மட்டும் சொத்து வரியாக ரூ.50.26 கோடியும், தொழில் வரியாக ரூ.45.94 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகளின் கண்காணிப்பு, கள ஆய்வுகள், வரி வசூலுக்கான திட்டமிடல் மற்றும் கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வசூல் நடவடிக்கைகள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சி கட்டமைப்பு மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வரி வருவாய் முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில், உரிய காலத்தில் வரிகளை செலுத்திய பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி நன்றி தெரிவித்துள்ளது.
