தூத்துக்குடி: திருச்செந்தூரில் இன்று அதிகாலை கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், சுமார் 10 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுந்து கரையை தாக்கின. இதில் கடலில் புனித நீராடிய 5 பக்தர்களுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
திருச்செந்தூரில் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும் சில நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கமாக உள்ளது. அதே நேரத்தில், சில நேரங்களில் கடல் அலைகளும் சீற்றத்துடன் காணப்படும்.

இந்த நிலையில் கடலில் திடீரென அலைகளின் வேகம் அதிகரித்தது. சுமார் 10 அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் கரையை பலத்த வேகத்தில் தாக்கின.
அப்போது கடலில் புனித நீராடிக் கொண்டிருந்த சில பக்தர்கள் நிலைதடுமாறி விழுந்தனர். கடலுக்கு அடியில் பாறைகள் இருந்ததால், அவற்றில் மோதியதில் 5 பேருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.
காயமடைந்தவர்களில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த குணசேகரன் (45), கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சரோஜா (42), திருச்சியைச் சேர்ந்த இலஞ்சியம் (55), புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜகுமாரி (52), கிருஷ்ணவேணி (75) ஆகியோர் அடங்குவர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த 5 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடல் சீற்றம் காரணமாக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதியில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
