ஈரோடு: பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மங்களூரு சென்ட்ரலில் இருந்து ஈரோடு வழியாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்களின் சேவைக்காலம் அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மங்களூரு சென்ட்ரல்–சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06126) இன்று முதல் அக்டோபர் 26-ந்தேதி வரை திங்கட்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் திங்கட்கிழமைகளில் மாலை 4 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.
மங்களூருவில் இருந்து புறப்படும் ரெயில் திங்கட்கிழமை நள்ளிரவு 12.18 மணிக்கு போத்தனூர், அதிகாலை 1.28 மணிக்கு திருப்பூர், 2.10 மணிக்கு ஈரோடு வந்து சேருகிறது. பின்னர் ஈரோட்டில் இருந்து அதிகாலை 3.17 மணிக்கு சேலம், காலை 5.20 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடைகிறது.
சென்னை–மங்களூரு ரெயில்
இதேபோல் சென்னை எழும்பூர்–மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06125) நாளை முதல் அக்டோபர் 27-ந்தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை சென்றடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரெயில் செவ்வாய்க்கிழமை மாலை 6.05 மணிக்கு ஜோலார்பேட்டை, இரவு 7.37 மணிக்கு சேலம், 8.35 மணிக்கு ஈரோடு வந்து சேருகிறது. பின்னர் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு இரவு 9.28 மணிக்கு திருப்பூர், 10.43 மணிக்கு போத்தனூர் சென்றடைகிறது.
பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
