பெரம்பலூர்: சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, திண்டிவனத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற லாரி மீது மோதியது. பெரம்பலூர் அருகே நான்கு சாலை மேம்பாலத்தில் மின்வாரிய அலுவலகம் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தில் சிங்கம்புணரியைச் சேர்ந்த பொன் பாலதுரை (52), மணலியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர், பெண் பயணி உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
